Categories
தேசிய செய்திகள்

நாடு தழுவிய வேலைநிறுத்தம்! வங்கி சேவைகள் முற்றிலுமாக முடங்கும் நிலை…!!!

மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, வங்கி ஊழியர்கள் இன்று (அக். 22) திட்டமிட்டபடி நாடு தழுவிய ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, வங்கி ஊழியர்கள் இன்று திட்டமிட்டபடி நாடு தழுவிய அளவிலான ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதில், தமிழ்நாட்டில் 35 ஆயிரம் பேர் உள்பட அகில இந்திய அளவில் 3 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்கின்றனர். இதனால், வங்கி சேவைகள் முற்றிலுமாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

10 பொதுத்துறை வங்கிகளை இணைத்து, 4 வங்கிகளாக மாற்ற மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு வங்கி ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பொதுத்துறை வங்கிகளை வளர்ச்சியடையச் செய்வதற்குப் பதிலாக, அவற்றை அழிக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளதாகவும், அதன் ஒருபகுதியாக பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் வங்கி ஊழியர் சங்கம் குற்றஞ்சாட்டியது.

Image result for வங்கி இணைப்பு எதிர்ப்பு

வங்கிகள் இணைப்பால் ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை என்றும் ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுதவிர, பொதுத்துறை வங்கிகள் இணைப்பு, சீரமைப்பை ஆகியவற்றைக் கைவிட வேண்டும், வாராக் கடனை தீவிரமாக வசூலிப்பதோடு, கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அபராதக் கட்டணம் என்ற பெயரில் வாடிக்கையாளர்களைத் துன்புறுத்தக் கூடாது மற்றும் சேவைக் கட்டணத்தை உயர்த்தக்கூடாது, வங்கிகளில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும், வைப்புத் தொகைகள் மீதான வட்டியை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று, அகில இந்திய அளவில் ஒருநாள் வேலை நிறுத்தம் நடத்தப் போவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

Related image

இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தது. இதன்படி, நேற்று டெல்லியில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் மத்திய அரசு தலைமை தொழிலாளர் நல ஆணையர், இந்திய வங்கிகள் சங்கம், மத்திய நிதியமைச்சக அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில், ஊழியர் சங்கம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு எவ்வித தீர்வும் காணப்படவில்லை. கோரிக்கைகளை ஏற்க மறுத்ததால், இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து, திட்டமிட்டபடி அகில இந்திய அளவிலான ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று நடைபெறும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இவ்வேலை நிறுத்தப் போராட்டத்தால், வங்கிகளில் பணம் பெறுதல், பணம் வழங்குதல், காசோலை அளித்தல், காசோலை பரிவர்த்தனை போன்ற வங்கிப் பணிகள் முற்றிலுமாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |