செஸ் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு காவல்துறை அதிகாரி பரிசு வழங்கி பாராட்டியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காமராஜ் கல்லூரியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் 9, 11, 13, 15, 19 – வயதிற்கு உட்பட்ட போட்டியாளர்கள் பிரிவு மற்றும் பொதுப்பிரிவு என மொத்தம் 6 பிரிவுகளாக கலந்து கொண்டனர். இந்த போட்டிக்கு சர்வதேச நடுவரான ஆனந்தராம் நடுவராக இருந்துள்ளார்.
இதனையடுத்து நடந்த பரிசளிப்பு விழாவில் காமராஜ் கல்லூரி செயலாளர் சோமு, பொருளாளர் முத்துச்செல்வம், தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழக தலைவர் ஜோ பிரகாஷ் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்களான சிவகுமார், ஆனந்த கண்ணன், தூத்துக்குடி போக்குவரத்துப்பிரிவு காவல்துறை அதிகாரி மயிலேறும் பெருமாள் மற்றும் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த விழாவிற்கு கல்லூரியின் செயலாளர் சோமு தலைமை வகிக்க, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சிறப்பு அழைப்பாளராக வந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அப்போது அவர் மாணவ மாணவிகள் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகள் செய்வதில் அதிக ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளதாகவும், கல்வி ஒன்றை முக்கிய குறிக்கோளாக மாணவர்கள் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் வாழ்க்கையில் கல்வி, ஒழுக்கம் மற்றும் நற்பண்புகளை கடைப்பிடித்தால் சாதனையாளராக வாழலாம் என்று கூறியுள்ளார். அதோடு போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.