திமுக எப்போதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாது என்று திர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சேலத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார்.. அப்போது அவர், 1000 பேர் அமரும் வகையில் நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டு வருவதால் எம்பிக்கள் எண்ணிக்கை உயரலாம். எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வாய்ப்பிருப்பதால் எம்எல்ஏக்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றத் தேர்தலும் வர வாய்ப்புள்ளது என்று கூறினார்..
மேலும் அவர், நகை கடன் தள்ளுபடி வாக்குறுதியை நம்பி ஏராளமானோர் நகையை அடமானம் வைத்துள்ளனர்.. நகைக்கடன் தள்ளுபடிக்கான வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை. எந்த கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு நடந்தது என்பது குறித்து தெளிவாக இல்லை.. திமுக எப்போதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், நீட் தேர்வு விலக்குக்காக அதிமுக கொண்டு வந்த அதே தீர்மானத்தை திமுகவும் கொண்டு வந்துள்ளது. அதிமுக கொண்டுவந்த 7.5 சதவீத இட ஒதுக்கீடு சிறப்பான திட்டம் என்பதால், அதையே திமுக அரசு தொடர்கிறது. 7.5 சதவீத இட ஒதுக்கீடு, மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும் அதிமுக அரசே ஏற்றது, அதையே திமுகவும் செய்துள்ளது என்று தெரிவித்தார்..