15 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் ஓடைப்பட்டி கிராமத்தில் 15 வயதான சிறுமி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு சிறுமியை அவரது குடும்பத்தினர் கட்டாயபடுத்தி திருமணம் நடத்தி வைத்துள்ளனர். தற்போது அந்த சிறுமி கர்பமாக உள்ள நிலையில் பிரசவத்திற்காக தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சிறுமியின் வயதை உறுதி படுத்திய மருத்துவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின் அடிப்படையில் க.விலக்கு காவல்துறையினர் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் 18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த சிறுமியின் பெற்றோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தேனியில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.