நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற சென்ற அதிகாரிகள் முன்பு வீட்டை காலி செய்ய மறுப்பு தெரிவித்து பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள சிவகுருநாதபுரம் பகுதியில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் சுரண்டையில் மோட்டார்சைக்கிள் ஷோரூம் நடத்தி வருகின்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாமலை ஆறுமுகசாமி என்பவரிடம் தனது வீட்டு பத்திரத்தை கிரைய ஒப்பந்தம் போட்டு கொடுத்து கடன் வாங்கி உள்ளார். ஆனால் வாங்கிய கடனை அண்ணாமலையால் திரும்பி செலுத்தவில்லை. இதுதொடர்பாக ஆறுமுகசாமி தொடர்ந்த வழக்கில் அண்ணாமலை அவரது வீட்டை காலி செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவை நிறைவேற்றுவதற்காக காவல்துறையினர் பாதுகாப்புடன் அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டை காலி செய்வதற்கு அண்ணாமலை குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்ததோடு, அண்ணாமலையின் சகோதரிகள் தங்களுக்கும் இந்த வீட்டில் பங்கு உள்ளது என தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் அண்ணாமலையின் மனைவி கார்த்திகேயினி திடீரென தனது உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அவர் மீது தண்ணீரை ஊற்றி அறிவுரை வழங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து அண்ணாமலையின் வீட்டு சாவியை பெற்று அதிகாரிகள் ஆறுமுகசாமிடம் ஒப்படைத்து விட்டனர்.