சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது .
14- வது ஐபிஎல் தொடரின் 33-வது லீக் ஆட்டம் நேற்று துபாயில் நடைபெற்றது.இதில் டெல்லி கேப்பிடல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிக்கொண்டன. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் – விருத்திமான் சஹா ஜோடி களமிறங்கினர். இதில் முதல் ஓவரிலேயே டேவிட் வார்னர் டக் அவுட் ஆகி வெளியேறினார் அடுத்ததாக கேப்டன் கேன் வில்லியம்சன் 18 ரன்னும், சகா 18 ரன்னும், மனிஷ் பாண்டே 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர் இதனால் 74 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து ஹைதராபாத் அணி தடுமாறியது. இறுதியாக 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் நோர்ஜே 2 விக்கெட்டும், ரபடா 3 விக்கெட்டும், அக்சார் பட்டேல் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதன் பிறகு களமிறங்கிய டெல்லி அணி 135 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா – ஷிகர் தவான் ஜோடி களமிறங்கினர். இதில் பிரித்வி ஷா 11 ரன்னில் ஆட்டமிழக்க,அடுத்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் அய்யர் தாவனுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அப்போது 42 ரன்கள் எடுத்திருந்தபோது ரஷித் கான் பந்தில் தவான் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய ரிஷப் பண்ட் ,ஷ்ரேயாஸ் அய்யருடன் ஜோடி சேர்ந்தார். இறுதியாக டெல்லி அணி 17.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது .