சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கட்சி நிர்வாகிகளுடன் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, பிரச்சாரம் நடத்துவது குறித்து இன்னும் திட்டமிடப்படவில்லை. முதலில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். கூட்டுறவு வங்கிகளில் அரசியல் கட்சியினர் சார்பாக யாரும் போட்டியிடவில்லை.
கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு நடந்துள்ளது. எந்த ஆட்சியாக இருந்தாலும் அது குறித்து நடவடிக்கை எடுப்பார்கள். தமிழகம் முழுவதுமாக ஆயிரக்கணக்கான கூட்டுறவு சங்கங்கள் இருக்கிறது. அனைத்து கூட்டுறவு சங்கங்களிலுமே முறைகேடு நடந்ததாக தெரியவில்லை. 2024-இல் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வர வாய்ப்புள்ளது.
ஏனென்றால் நாடாளுமன்றத்துக்கு பிரமாண்ட கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதேபோன்று சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தல் வர வாய்ப்புள்ளது என்று கூறிஉள்ளார்.