எங்களையும் பேச அனுமதி வேண்டும் என்று தலீபான்களின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஐ.நா.பொதுச்செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐ.நா.வின் பொதுச்சபை கூட்டமானது கடந்த 14 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. அதிலும் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் நேரில் பங்கேற்கவுள்ளனர். அதில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனரோ, இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட், பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸ், இந்திய பிரதமர் மோடி போன்ற உலகத்தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த நிலையில் தலீபான்களின் வெளியுறவுத்துறை அமைச்சரான அமீர் கான் முட்டாகி கடிதம் ஒன்றை ஐ.நா.வின் பொதுச்செயலாளரான அன்டோனியோ குட்டரஸுக்கு அனுப்பியுள்ளார். அதில் ” ஆப்கானின் முன்னாள் ஆட்சியில் இருந்த அஷ்ரப் கனியின் ஐ.நா.பிரதிநிதியை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் அவருக்கு பதிலாக முகமது சுஹைல் ஷாகீன் என்பவரை புதிய பிரதிநிதியாக தேர்ந்தெடுத்துள்ளோம். மேலும் ஆப்கான் அரசின் தூதரான குலாம் இசக்சாயின் பணி நிறைவடைந்தது.
இதனால் ஐ.நா. பொதுச்சபை தலீபான்கள் தூதரை ஏற்றுக்கொள்வது உலகளவில் எங்களை அனைவரும் அங்கீகரிப்பதற்கு ஒரு முதல் முயற்சியாக அமையும். குறிப்பாக பொருளாதரா நெருக்கடியில் உள்ள ஆப்கானிஸ்தானின் நிதியை திறக்க ஒரு வாய்ப்பாகும்” என்று எழுதியுள்ளார். அதாவது தலீபான்கள் அமைப்பினரையும் பேச அனுமதியளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கடிதமானது தலீபான்களிடம் இருந்து வந்தது என்று ஐ.நா. பொதுச் செயலாளரின் செய்தி தொடர்பாளரான பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.