ஏற்கனவே இருந்த கிரிக்கெட் வாரியத் தலைவரை நீக்கி விட்டு புதிதாக நசீம் கானை தலீபான்கள் நியமனம் செய்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானை 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கு அவர்கள் இஸ்லாமிய மதக் கொள்கைகளை அமல்ப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக தற்போது அமைக்கப்பட்ட இடைக்கால அமைச்சரவையில் பெண்களுக்கு இடம் அளிக்காததால் தலீபான்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும் பெண்களை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும், பார்வையிடவும் தடை விதித்துள்ளனர்.
இதேபோன்று IPL விளையாட்டு போட்டிகளையும் ஒளிபரப்ப தடை விதிக்கபப்ட்டுள்ளது. ஏனெனில் மைதானத்தில் பெண் பார்வையாளர்கள் இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஆப்கானின் கிரிக்கெட் வாரியத் தலைவராக ஹமித் ஷின்வாரி இருந்து வந்தார். தற்பொழுது அவரை தலீபான்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளனர். மேலும் அவருக்கு பதிலாக நசீம் கான் என்பவரை புதிய கிரிக்கெட் வாரியத் தலைவராக தலீபான்கள் நியமனம் செய்துள்ளனர்.
குறிப்பாக ஆப்கானிஸ்தான் டீ20 தொடருக்கான அணியின் கேப்டனான ரஷீத் கான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா உடனான அனைத்து போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையில் ஆப்கானிஸ்தானில் புதிய கிரிக்கெட் வாரியத் தலைவரை தலீபான்கள் நியமனம் செய்துள்ளது மிகவும் முக்கியம் வாய்ந்த விஷயமாக பார்க்கப்படுகிறது.