Categories
அரசியல்

சுகாதார பணிகளை தீவிரப்படுத்துங்க…. முதல்வருக்கு ஓபிஎஸ் வைத்த கோரிக்கை…!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு முழுமையாக முடிவடையாத நிலையில், மூன்றாவது அலையை குறித்து பொதுமக்களிடையே மிகுந்த அச்சம் நிலவி வருகின்றது. இந்நிலையில் இந்தியாவில் அதிகமாக பரவி வரும் டைப் 2 வகை டெங்குக் காய்ச்சலானது மூளைக் காய்ச்சல் உட்பட பல மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்தை உடையது என்றும், தமிழ்நாடு, கேரளா ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் தீவிரமாக பரவி வருவதால் அந்த மாநிலங்களுக்கு மத்திய அரசானது எச்சரிக்கை விடுத்துள்ளது.

தண்ணீரில் உருவாகும் ஏடிஸ் கொசுக்கள் மூலமாக இக்காய்ச்சலானது பரவி வருகிறது. தினமும் இக்காய்ச்சலால் சராசரி 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது முந்தைய ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு சற்று அதிகமாகவே உள்ளது. தமிழகத்தில் பருவமழை தொடங்க உள்ள நிலையில் ஆங்காங்கே நீர் தேங்காமலும், தங்கள் வீடுகளை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாகவும், நீர் தேங்கியுள்ள  இடங்களில் பொதுமக்கள் நடக்காமலும் இருப்பது மிக மிக அவசியமான ஒன்றாகும்.

டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுத்தல், மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தல் போன்றவற்றை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கடமை மாநில அரசுக்கும் பொதுமக்களுக்கும் உண்டு. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி நோய் பரவுவதைத் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், இந்நோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், சுகாதார பணிகளை பொதுஇடங்களில்  தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Categories

Tech |