கிணற்றில் மூழ்கிய மாணவனை தீயணைப்புத்துறை வீரர்கள் பிணமாக மீட்டெடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கம்மவார் காலனியில் கருப்பசாமி என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு வெற்றிவேல் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். கடந்த செப்டம்பர் 21 – ஆம் தேதியன்று வெற்றிவேல் தனது நண்பர்களுடன் விளாம்பட்டி பகுதியில் இருக்கும் கிணற்றிற்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது குளித்துக்கொண்டிருந்த வெற்றிவேல் திடீரென கிணற்றில் மூழ்கி மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடியும் மாணவனை மீட்க முடியவில்லை. இதனால் கிணற்றில் இருக்கும் தண்ணீரை மோட்டாரின் மூலம் வெளியேற்றி மாணவனை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர். இதனை அடுத்து 18 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறை வீரர்கள் மாணவனை நேற்று காலை பிணமாக மீட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.