தங்கத்தை கடத்தி செல்ல முயன்ற வாலிபரை சுங்க அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து விட்டனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கத்தில் பன்னாட்டு விமான நிலையம் உள்ளது. அங்கு துபாயிலிருந்து சிறப்பு விமானம் வந்து இறங்கியுள்ளது. அதில் தங்கத்தினை கடத்தி வந்துள்ளதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக வந்த ஒரு வாலிபரை அதிகாரிகள் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் அதிகாரிகள் அவரின் உடைமைகளை சோதனை செய்துள்ளனர்.
ஆனால் அதில் எதுவும் இல்லாததால் அதிகாரிகள் அந்த வாலிபரை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் பிளாஸ்டிக் பார்சல்களை தனது உள்ளாடைகளில் மறைத்து வைத்துள்ளதைப் பார்த்துள்ளனர். பின்னர் அந்த பார்சலில் இருந்த 583 கிராம் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அதோடு பறிமுதல் செய்யப்பட்ட அந்த தங்கத்தின் மதிப்பு 27 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து சுங்க அதிகாரிகள் அந்த வாலிபரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.