கடலில் மூழ்கிய மீனவரை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கேரள மாநிலத்தில் தங்கியிருந்து மீன்பிடித்து வந்துள்ளனர். அந்த கடந்த 17-ஆம் தேதி 12 பேர் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றுள்ளனர். அந்த 12 பேரில் 9 மீனவர்கள் குமரியை சேர்ந்தவர்கள் என்றும், 3 மீனவர்கள் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் 12 பேரும் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது விசைப்படகு திடீரென வீசிய சூறைக்காற்றால் பழுதாகிவிட்டது.
மேலும் படகுக்குள் கடல் நீர் புகுந்து கொஞ்சம் கொஞ்சமாக அந்த படகு நீருக்குள் மூழ்க தொடங்கியது. அந்த நேரத்தில் அதிர்ஷ்டவசமாக அருகில் வந்த கேரள மீனவர்கள் உதவியோடு 12 மீனவர்களில், 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர்களோடு சென்ற வாணி கிராமத்தை சேர்ந்த ஜான் என்பவர் மட்டும் நீருக்குள் மாயமாகிவிட்டார். இதுகுறித்து பிற மீனவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினரும், பிற மீனவர்களும் இணைந்து ஜானை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து மீனவர்கள் கூறும் போது,” படகு முழுமையாக நீருக்குள் மூழ்கி இருக்கலாம் அல்லது காற்று வீசும் திசைக்கு அடித்து செல்லப்பட்டிருக்கலாம்” என தெரிவித்துள்ளனர். எனவே மாயமான மீனவரை போர்க்கால அடிப்படையில் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெற்காசிய மீனவர் தோழமை பொது செயலாளரான சர்ச்சில் தமிழக அரசுக்கும், இந்திய கடலோர காவல் படைக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.