மகனுக்கு பெண் கிடைக்காத விரக்தியில் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கீழ்குப்பம் பகுதியில் விவசாய கூலி தொழிலாளியான முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தாமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ரவீந்திரன், சுரேந்திரன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் திருப்பூரில் இருக்கும் ஒரு தனியார் கம்பெனியில் சுரேந்திரன் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சுரேந்திரன் அதே நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு இளம்பெண்ணை காதலித்து பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்துள்ளார்.
இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மூத்த மகனுக்கு திருமணம் நடைபெறுவதற்கு முன்னரே நீ எவ்வாறு திருமணம் செய்து கொள்ளலாம் என சுரேந்திரனை கண்டித்துள்ளனர். இந்நிலையில் மூத்த மகனான ரவீந்திரனுக்கு பெண் கிடைக்காததால் தம்பதியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இருவரும் சேர்ந்து உன்னால்தான் ரவீந்திரனுக்கு பெண் கிடைக்கவில்லை என கூறி சுரேந்திரனை திட்டியுள்ளனர். இதனையடுத்து அந்த தம்பதியினர் சுடுகாட்டில் வைத்து திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளனர்.
அதன்பின் அவ்வழியாக சென்றவர்கள் தம்பதிகள் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இருவரின் சடலங்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.