சிறுமிகளை கடத்தி சென்ற 2 சிறுவர்களை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 12-ஆம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கும் மற்றொரு பள்ளியில் படிக்கும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்களுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறி விட்டது. இந்நிலையில் காதல் ஜோடிகள் அடிக்கடி வெளியில் சென்று பழகி வந்துள்ளார். இதனை அறிந்த பெற்றோர் சிறுமிகளை கண்டித்துள்ளனர். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற 4 பேரும் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த சிறுமிகளின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பள்ளி சீருடையில் 4 மாணவ மாணவிகள் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்தது தெரியவந்துள்ளது. அவர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து விசாரித்த போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுவர்கள் அந்த மாணவிகளை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் 2 சிறுவர்களையும் கைது செய்துள்ளனர். மேலும் மாணவிகளை மீட்டு அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டனர்.