சூறைக்காற்றால் 23 மீனவர்களுடன் விசைப்படகு நடுக்கடலில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் கிறிஸ்துராஜா நகர் பகுதியில் விசைப்படகு உரிமையாளரான அர்த்தனாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது விசைப்படகில் 23 மீனவர்களை ஏற்றிக்கொண்டு மீன் பிடிப்பதற்காக முட்டம் துறைமுகத்திலிருந்து கடலுக்குள் சென்றுள்ளார். அப்போது நடுக்கடலில் திடீரென சூறைக்காற்று அடித்துள்ளது. இந்நிலையில் அலைகள் 6-12 அடி வரை எழுந்ததால் விசைப்படகுக் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
மேலும் விசைப்படகில் கடலில் பிடிக்கப்பட்ட மீன்கள் மற்றும் அதனைப் பதப்படுத்த பயன்படுத்தப்படும் ஐஸ்கட்டிகள் என பாரம் அதிகமாக இருந்ததால் விசைப்படகு திடீரென ஒருபுறமாகக் கடலுக்குள் கவிழ்ந்து மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்துள்ளனர். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த இன்னொரு படகில் வந்த மீனவர்கள், தண்ணீரில் தத்தளித்தவர்களை காப்பாற்றி கரைக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.
இதனையடுத்து காயமடைந்த 23 மீனவர்களும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கடலோர பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கடலோர பாதுகாப்பு படை காவல்துறையினர் கவிழ்ந்த படகினை விரைவாக மீட்டு கரைக்கு கொண்டு வரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கப்பல் கவிழ்ந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.