சிறுமி திருமணம் குறித்து 2 பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள அலிவலம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி பல வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறது. இந்த குழந்தைகள் ராஜாவின் தாய் ராணியிடம் வளர்ந்து வருகின்றனர். இதில் ராஜா நாகப்பட்டினத்தில் இருக்கின்றார். இதனிடையில் பரவாக்கோட்டையை சேர்ந்த காமராஜ் என்பவர் மனைவியை விவாகரத்து செய்த நிலையில் 2-வது திருமணம் செய்வதற்காக ராணியின் மூத்த பேத்தியை பெண் கேட்டுள்ளார். ஆனால் அந்தப் பெண் கல்லூரியில் படிப்பதால் இளைய பேத்தியை காமராஜிக்கு திருமணம் செய்து வைக்க ராணி முடிவு செய்தார். இதற்காக ராணி 1 லட்சம் ரூபாயை அவரிடம் பெற்றுக்கொண்டு 2-வது பேத்தியான 16 வயது சிறுமியை காமராஜிக்கு திருமணம் செய்து வைத்தார்.
இந்நிலையில் ராணி மீண்டும் 50 ஆயிரம் ரூபாய் வேண்டும் என காமராஜிடம் கேட்டுள்ளார். ஆனால் காமராஜ் பணம் இல்லை என்று தெரிவித்ததால் ராணி காவல் நிலையத்தில் புகார் செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த காமராஜ், ராணியை தாக்கியுள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த ராணி உறவினர்களிடம் திருமணம் குறித்து தெரிவித்தார். இதனையடுத்து உறவினர்கள் இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பின் இன்ஸ்பெக்டர் கனிமொழி சிறுமியை திருமணம் செய்த காமராஜ் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த பாட்டி ராணியை போக்சோ சட்டம், குழந்தை திருமணம் போன்ற 2 பிரிவுகளின் கீழ் கைது செய்தனர். மேலும் இவர்கள் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.