தமிழகத்தில் பல ஜவுளி நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். அதனை அடுத்து மதுரையில் கலைஞர் நூலகம் அமைய உள்ள இடத்தில் ஆய்வு செய்தபின் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளரை சந்தித்து பேசுகையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டுவர மாநில அரசின் நிபந்தனைகளுக்கு தகுந்தவாறு இருந்தால் அதனை பரிசீலனை செய்வோம் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஜி.எஸ்.டி கவுன்சிலர் தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி யால் தமிழகத்திற்கு வருவாய் இழப்பீடுகள் ஏற்பட்டுள்ளன.
தமிழகத்தைப் பொறுத்தவரை பெட்ரோல்,டீசல் மற்றும் கலால் வரியில் மட்டுமே அதிக அளவு வருவாய் வருகிறது. மேலும் அரசுக்கு எந்த வகையிலும் இழப்பீடு வராமல் இருக்க வேண்டும். ஆனால் ஏற்கனவே அரசுக்கு 5 லட்சத்து 75 ஆயிரம் கோடி அளவிற்கு நிதி பற்றாக்குறைகள் உள்ளன. அவ்வாறு இருந்தும் உள்ளாட்சித் துறையின் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பல ஆக்கபூர்வமான பணிகளை முதல்வர் செய்து வருகின்றார்.
அதனால் படிப்படியாக நிதி நெருக்கடிகளை சமாளித்து பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் திட்டங்களையும் வழங்கி வருகின்றார். அதனைத் தொடர்ந்து ஜவுளிக் கடைகளில் ஆய்வு பணியானது நாளை முடிவடையும். பல ஜவுளி நிறுவனங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வரிஏய்ப்பு நடக்கிறது. பொதுமக்களிடம் இருந்து வாங்கும் வரியை அரசுக்கு செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்வதை வெளி உலகத்திற்கு கொண்டு வர வேண்டும்.
மேலும் பல நிறுவனங்கள் பொதுமக்களிடம் வாங்கும் வரியை செலுத்தாமல் அரசை ஏமாற்றுகிறது. அதனால் கடந்த ஒரு வாரத்தில் 103 இடங்களில் ரெய்டு நடக்கிறது. இவை தொடர்ந்தால் அவர்களது உரிமத்தை ரத்து செய்யவும் ஆலோசிக்கிறோம். இன்னும் ஒரு வாரத்தில் அதனைப் பற்றிய விபரங்கள் வெளியிடப்படும். வணிக வரித்துறையில் அலுவலர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அதன் பின்னர் வரி வருவாயில் தமிழகத்தில் பல ஆயிரம் கோடி ரூபாயை ஏமாற்றி கொண்டிருப்பது நன்றாக தெரியும். அதனால் பல பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரி இல்லாமல் வழங்குகிறார்கள். மேலும் சில பொருள்களுக்கு மக்களிடம் வரி வசூலித்து விட்டு அதை செலுத்துவதில்லை. இதற்கு ஒரு வாரத்திற்குள் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதனைத் தொடர்ந்து தி.மு.க தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் கூறியது போன்று உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி 100% வெற்றி பெரும் என்றும் கூறியுள்ளார்.