சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, முகமூடி, யு டர்ன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகர் நரேன். இவர் தற்போது கார்த்தி-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் திரைக்கு வரவிருக்கும் கைதி திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 25ஆம் தேதி வெளியாகிறது.
இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி நரேன் கூறுகையில், ”நான் நடித்த படங்கள் பலவும் வெற்றி தோல்வியை சரிசமமாக பெற்றுள்ளன. கைதி படமும், அந்த கதாபாத்திரமும் எனக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. நேர்மையான காவல்துறை அதிகாரியாக இந்த படத்தில் நடித்துள்ளேன். இதற்கு முன்பு பல படங்களிலும் காவல்துறை அதிகாரியாக நடிக்க வாய்ப்பு வந்தது. அவற்றை பலமுறை நான் மறுத்திருக்கிறேன். ஆனால் இந்த படம் தனித்துவம் வாய்ந்ததன் காரணமாக ஏற்று நடித்திருக்கிறேன்.
கார்த்தி என் நெருங்கிய நண்பர். அவர் மூலமாக கைதி படத்திற்கான வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் லோகேஷுக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. அவர் சக மனிதரை பாராட்டி ஊக்கமளிக்கக்கூடியவர். கைதி படமும், பிகில் படமும் ஒன்றாக திரைக்கு வருவது ஆரோக்கியமான போட்டியாகவே இருக்கும்” என்று கூறியுள்ளார்.