Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“எனக்கு அதை வாங்கி தாங்க” வாலிபர் தற்கொலை மிரட்டல்…. கோவிலில் பரபரப்பு….!!

கோவில் ராஜகோபுரத்தின் மேல் அமர்ந்து வாலிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். அதேபோல் ஏராளமான பக்தர்கள் ராஜகோபுரம் முன்பு நின்று சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் ராஜ கோபுரத்தின் மீது வெளிப்புறம் வழியாக சுமார் 20 அடிக்கு மேல் ஏறி ஒரு வாலிபர் அமர்ந்து கொண்டார். இதனைப் பார்த்த கோவிலுக்கு வந்த பக்தர்கள் ராஜகோபுரபகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ராஜகோபுரத்தின் கீழ் பகுதியில் காவல்துறையினர் நின்று அந்த நபரிடம் பேச்சு கொடுத்துள்ளனர்.

அப்போது அந்த வாலிபர், புதிதாக வாங்கிய செல்போனை ஒருவர் எடுத்துச் சென்று தலைமறைவாகிவிட்டார். அவரிடம் இருந்து செல்போனை வாங்கி தராவிட்டால் நான் ராஜகோபுரத்தின் மேலிருந்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் அந்த நபரிடம் சமரச முயற்சியில் ஈடுபட்டனர். அதன்பின் அதிகாரிகள் ராஜகோபுரத்தின் மேலே ஏறிச் சென்று அந்த வாலிபரை பத்திரமாக மீட்டு கீழே அழைத்து வந்தனர்.

இதனை ஏராளமானோர் கோபுரத்தின் கீழ் பார்க்க திரண்டனர். அதன்பின் காவல்துறையினர் அந்த வாலிபரை திருவண்ணாமலை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் பகுதியில் வசிக்கும் புருஷோத்தமன் என்பதும் இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக அந்த வாலிபர் திருவண்ணாமலையில் சுற்றித்திரிந்து வந்ததும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |