தேர்தலின் போது அனைத்து நகை கடன்களை ரத்து செய்வோம் எனக் கூறிய திமுக தற்போது 5 பவுனுக்கு மேல் ஆன நகை கடன்களை வசூல் செய்ய வேண்டும் என்று கூறியிருப்பது விவசாயிகளை வேதனை அடையச் செய்து இருப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் நேரத்தில் அல்லி வீசிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திமுக தவித்து வருவதாக விமர்சித்தார். அவர் பேசியதாவது, தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளை திராவிட முன்னேற்றக் கழகம் அள்ளி வீசி இருக்கிறது. அதிலே கடன் தள்ளுபடி மிகவும் முக்கியமான ஒன்று.
குறிப்பாக நகை கடன் தள்ளுபடி என்பது மக்களுக்கு அரசின் மீது மிகப்பெரிய அளவிலே ஒரு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. அந்த நம்பிக்கை கொடுத்து விட்டு, இப்பொழுது 5 பவுனுக்கு உள்ளேதான் நகை கடன் தள்ளுபடி என்று அறிக்கை கொடுத்து, மேலும் ஐந்து பவுனுக்கு மேலே பெறுபவர்களும் சிறு – குறு விவசாயிகள்தான்.
பல கஷ்டங்களை சந்தித்து கொண்டிருப்பவர்கள்தான். அவர்களை நசுக்கி பிழிகின்ற வகையிலே இப்போது ஒருகாலக் கெடுவுக்குள் கட்ட வேண்டும் என்று சொன்னால், நிச்சயமாக அவர்களுக்கு மேலும் மேலும் இந்த அரசு சிரமம் கொடுக்கிறது. அதனை நீக்கக்கூடிய நிலையிலேயே அவர்களுக்கும் உதவி செய்யும் வகையில் அரசு அறிவிப்பு வர வேண்டும், அல்லது நீண்ட கால அவகாசம் அவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று தா.மா.காவின் வேண்டுகோள் என தெரிவித்தார்.