கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த சில மாதங்களாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு ஊரடங்கு தளர்வு வழங்கப்பட்டதை அடுத்து, கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நேற்று முதல் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்ட காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சுவாமி தரிசனம் செய்வதற்கான நேரம் மேலும் மூன்று மணி நேரம் நீட்டிக்கபட்டுள்ளதால் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதனால் திருச்செந்தூர் கோவிலில் இன்று முதல் நாளை மறுநாள் வரை மூன்று நாட்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவிலில் நாழிக் கிணற்றில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அங்கு பக்தர்கள் செல்லாதவாறு தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.