சீன நாட்டின் எவர் கிராண்ட் என்னும் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு திவாலாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க நாட்டின், மிகப்பெரிய முதலீட்டு வங்கிகளில் நான்காவது இடத்தில் இருந்த லேமென் பிரதர்ஸ், கடந்த 2008-ஆம் வருடத்தில் திவால் நோட்டீஸ் அனுப்பியது. கணக்கின்றி, வீட்டுக் கடன் வழங்கியதால் இந்த வங்கியை அடைக்கும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, மேலும் சில வங்கிகளுக்கு அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், அமெரிக்காவின் பொருளாதாரம் மொத்தமாக பாதித்தது. இதன் காரணமாக, உலக பொருளாதாரமும் பாதிக்கப்பட்டது. தற்போது, சீன நாட்டின், எவர்கிராண்ட் என்ற மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனத்தால், 13 வருடங்கள் கழித்து, மீண்டும் உலக பொருளாதாரம், பாதிக்கப்பட்டுவிடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தை, கடந்த 1996-ஆம் வருடத்தில், உலக பணக்காரர்களில் 53-வது இடத்தில் இருக்கும் சீன நாட்டின் ஹுய் கா யான் என்பவர் உருவாக்கினார். புகழ் பெற்ற இந்நிறுவனம், சீன நாட்டில் மட்டும் 1300 கட்டடங்களுக்கான ஒப்பந்தத்தை பெற்றிருக்கிறது. இந்நிலையில், 22,15,000 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு, திரும்ப செலுத்த முடியாத நிலையில் இருக்கிறது.
இந்நிறுவனம், நேற்று அதற்கான கடன் மற்றும் வட்டியை செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், இந்த நேரத்திற்குள் தங்களால் செலுத்த முடியாது என்று அந்நிறுவனத்தின் தலைவர் ஹுய் கா யான் முன்னரே அறிவித்திருக்கிறார். இதனால், உலக அளவில் பங்குச்சந்தைகள் சரிவடைந்தது. இதற்கான விளைவு, இந்தியாவிலும் ஏற்பட்டது.
வளரும் சந்தைகளை வைத்திருக்கும், இந்தியா, ரஷ்யா, பிரேசில், போன்ற நாடுகள் சரிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த எவர்கிராண்ட் நிறுவனத்திற்கு சீனாவை சேர்ந்தவர்கள் தான் அதிகமாக கடன் கொடுத்திருக்கிறார்கள். இதனால், பிற நாடுகளில் அதற்கான தாக்கம் இருக்காது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். எனினும், உலகில், இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக சீனா இருப்பதால், மீண்டும் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படுமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது.