அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட பெண் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜகுமாரி என்ற மனைவி இருந்துள்ளார். ராஜகுமாரி வயிற்றில் உருவான நீர்க்கட்டிப் பிரச்சனையால் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் அதே மாவட்டத்திலுள்ள உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு அறுவைச் சிகிச்சைச் செய்யப்பட்டுள்ளது.
அதன்பின் உடல்நலம் பாதிக்கப்பட்ட ராஜகுமாரி தனியார் மருத்துவமனையின் மருத்துவரின் பரிந்துரையின்படி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனாலும் ராஜகுமாரியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் தனியார் மருத்துவமனையின் முன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜகுமாரியின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, அவர்களை சாலையிலிருந்து கலைந்துச் செல்லுமாறு செய்துள்ளனர். இதற்கிடையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த ராஜகுமாரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். எனவே ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் வேலூர் சாலையிலும் மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜகுமாரியின் உறவினர்களோடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் கலெக்டரிடம் பேசவேண்டும் பிடிவாதமாகக் கூறியதால், ராஜகுமாரியின் உறவினர்களில் சிலரை மட்டும் மாவட்ட ஆட்சியரிடம் காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.
அதன்பின் ராஜகுமாரியின் உறவினர்களிடம் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் மூலம் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியது தெரியவந்துள்ளது. அதற்குப்பின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளது.