மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் இன்று 301வது நாளை எட்டியுள்ளது.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாய சங்கத்தினர் கடுமையாக போராடி வருகின்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக அழிக்கும் இந்த சட்டங்களை ரத்து செய்ய கோரி டெல்லி மாநில எல்லையில் விவசாயிகள் நடத்தும் தொடர் போராட்டம் இன்று 301 நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் இப்போராட்டத்தை வழிநடத்தும் சம்யுக்தா கிஷான் மோட்சா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் புதிய வேளாண் சட்டத்தை நிறுத்தக்கோரி டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் அமைதியான முறையில் நடத்திவரும் அறப்போர் 300 நாட்களை கடந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் கோரிக்கைகள் குறித்து தெளிவாக தெரிந்தாலும் அதை மத்திய அரசு ஏற்க மறுக்கிறது எனவும், தங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கும் வரை போராட்டம் தொடரும் எனவும், விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வரும் 27ஆம் தேதி பாரத் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பந்த் நடத்துவதற்காக முன்னேற்பாடு பணிகளை தீவிரமாக ஏற்பட்டு உள்ளதாகவும் கிஷான் மோட்ஷா அமைப்பு கூறியுள்ளது.