பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேரை வாலிபர் ஒருவர் தீ கொளுத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வி.களத்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் லட்சுமி நாராயண பெருமாள் வகையறா கோவிலுக்கு சொந்தமான தேர் ஒன்று வெயிலிலும், மழையிலும் நனையாமல் இருப்பதற்காக தகர கொட்டகை அமைத்து பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர் நிறுத்தப்பட்டிருந்த கொட்டகையின் பூட்டை வாலிபர் ஒருவர் உடைத்து உள்ளே சென்றுள்ளார். இதனையடுத்து அந்த வாலிபர் தேரை தீ வைத்துக் கொளுத்த முயற்சித்த போது பொதுமக்கள் உடனடியாக அவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டனர்.
அதன்பிறகு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் வாலிகண்டபுரம் பகுதியில் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட முகமது சலீம் என்பது தெரியவந்துள்ளது. இதற்கிடையில் இந்து முன்னணியினர் வி.களத்தூர் பேருந்து நிலையம் அருகில் தேரை தீ வைத்துக் கொளுத்த முயன்ற வாலிபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டமானது திருச்சி மண்டல செயலாளர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு இந்து முன்னணியினர் காவல் நிலையத்திற்கு சென்று கோரிக்கை மனுவை அளித்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.