Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது…. போலீஸ் மீது மண்ணெண்ணெய் ஊற்றிய பெண்…. சென்னையில் பரபரப்பு…!!

ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது மண்ணெண்ணெய் ஊற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள நெற்குன்றம் பகுதியில் இருக்கும் மதுரவாயல்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மார்க்சகாய ஈஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான 23 கோடி ரூபாய் மதிப்புள்ள இடம் உள்ளது. இந்த இடமானது இந்து சமய அறநிலையத்துறையின் பாற்பட்டது. இந்நிலையில் கோவிலுக்குச் சொந்தமான அந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட கடைகளை கட்டி அதில் பல வருடங்களாக வசித்து வருகின்றனர்.

ஆனால் அவர்கள் இந்து சமய அறநிலையத்துறைக்கு இதுவரை வாடகை செலுத்தாததால் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் படி அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்பின்னும் ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் யாரும் கோவிலுக்கு சொந்தமான  இடத்தை விட்டு காலி செய்யவில்லை. இதனையடுத்து மதுரவாயல் தாசில்தார் தலைமையில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அங்குச் சென்று வீடுகள் மற்றும் வாடகை செலுத்தாதக் கடைகளை இடிக்க போவதாக கூறியுள்ளனர்.

இதனால் கோபமடைந்த ஆக்கிரமிப்பாளர்கள் காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த 2 பெண்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளனர். இதனைப்பார்த்த மகளிர் காவல்துறை அதிகாரிகள் அந்த பெண்களைத் தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றியுள்ளனர். அதன்பின் இதனை மாடியில் நின்றுப்பார்த்து கொண்டிருந்த வேறொரு பெண் காவல்துறையினர் மீது மண்ணெண்ணையை ஊற்றியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற காவல்துறை அதிகாரிகள் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்ட அதிகாரிகள் மீது தண்ணீரை ஊற்றியுள்ளனர். மேலும் காவல்துறையினர் ஆக்கிரமிப்பு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு  பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதில் வாடகை செலுத்துவதற்காக எங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என சிலர் கேட்டதால், வாடகை பாக்கியுள்ள கடைகளை சீல் வைத்துள்ளனர். இதற்கு பிறகும் வாடகை செலுத்தாவிட்டால் வீடுகள், கடைகள் இடிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |