அவலாஞ்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளித்து அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சி காட்டுப்பகுதியில் சூழல் சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது. இங்கு இயற்கை எழில் மிகுந்த மலை முகடுகள், அரியவகை பறவைகள், சிறுத்தை, காட்டெருமை, புலி போன்ற வனவிலங்குகளும் காணப்படுகின்றன. அதோடு காலிபிளவர் போன்று மூடிய நிலையில் காணப்படும் அவலாஞ்சி வனப்பகுதியில் பவானி அம்மன் கோவில் அமைந்துள்ளது. மேலும் லக்கிடி காட்சி முனை இயற்கை அழகை கண்டு ரசிப்பதற்கு ஏற்ற இடமாக உள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு ஒரே நாளில் பெய்தமழையினால் வனப்பகுதியில் லக்கிடி காட்சி முனைக்குச் செல்லும் பாதையில் நிலச்சரிவும், இன்னும் சில இடங்களில் சாலைகள் பெயர்ந்தும் காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக அவலாஞ்சி வனப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 2 வருடத்திற்குப் பிறகு சுற்றுலாவிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு இடங்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
சுற்றுலா பயணிகளுக்கு சோதனைச்சாவடி முதல் வனத்துறையினர் விருந்தினர் மாளிகை வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நுழைவு கட்டணமாக ஒரு நபருக்கு 20 ரூபாயும், வாகனங்களை நிறுத்துவதற்காக 30 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் அவலாஞ்சி வனப்பகுதிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் அங்கு காணப்படும் வனவிலங்குகள், அவலாஞ்சி அணை, லக்கிடி காட்சி முனை, நர்சரியில் உள்ள ஆர்க்கிட் செடிகள் போன்றவற்றை கண்டு ரசித்து விட்டு செல்கின்றனர். மேலும் சூழல் சுற்றுலாவிற்கு முழுமையாக அனுமதிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கூறியுள்ளனர். அதோடு நிலச்சரிவினால் ஏற்பட்ட பாதிப்புகளை விரைந்து சரிசெய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.