வாடகைப் பணத்தை கேட்க சென்ற பெண்ணிடம் பா.ஜ.க பிரமுகர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள பொத்தேரி பகுதியில் லீனா பெர்னாண்டஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அயல்நாட்டில் வசிக்கும் மருமகன் உள்ளார். அந்த மருமகனின் இல்லம் கொட்டிவாக்கத்தில் அமைந்துள்ளது. அந்த வீட்டின் பராமரிப்புகளை லீனா பெர்னாண்டஸ் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட பா.ஜ.க வழக்கறிஞர் அணி செயலாளர் சிவஅரவிந்தன் என்பவருக்கு மாதம் 40ஆயிரம் ரூபாய் என்று அந்த வீட்டை வாடகைக்குக் கொடுத்துள்ளார்.
அதோடு 2 லட்ச ரூபாயை லீனா முன்தொகையாகவும் பெற்றுள்ளார். இந்நிலையில் சிவஅரவிந்தன் 4 மாதங்கள் மட்டும் வாடகை செலுத்திவிட்டு 11 மாதங்களாக வாடகைத்தொகையை நிலுவையில் வைத்துள்ளார். எனவே பணத்தை வசூலிப்பதற்காக லீனா அங்கு சென்றபோது, வாடகைக்குக் கொடுத்த வீட்டில் வேறு சிலர் குடியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதன்பின் இதுகுறித்து சிவஅரவிந்தனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் வேறு சிலருக்கு வீட்டை 17 லட்ச ரூபாய்க்கு ஒப்பந்தத்திற்குக் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
அதோடு வீட்டைத் தரமுடியாது எனவும், லீனாவைக் கொலை செய்து விடுவதாகவும் கூறி சிவஅரவிந்தன் மிரட்டியுள்ளார். இதுகுறித்து லீனா பெர்னாண்டஸ் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பா.ஜ.க பிரமுகரான சிவஅரவிந்தனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.