வெளிநாட்டில் இருந்து வந்த வாலிபர் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் ஞானசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சார்ஜா நாட்டு தனியார் தொழிற்சாலை ஊழியரான முத்துசீமான் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் முத்து சீமானின் ஒப்பந்த காலம் முடிந்துவிட்டதால் அவர் சொந்த ஊருக்கு வருவதற்காகச் சென்னை வந்திறங்கியுள்ளார். அப்போது முத்துசீமான் ஞானசேகரனிடம் செல்போனில் பேசியுள்ளார். ஆனால் முத்துசீமான் வீட்டிற்கு செல்லவில்லை, செல்போனும் எடுக்கவில்லை என்பதால் பதற்றமடைந்த ஞானசேகரன் சென்னைக்குப் புறப்பட்டுள்ளார். அங்கு விமானநிலைய அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளார். அந்த புகாரின்படி விமான நிலைய அதிகாரிகள் நடத்திய விசாரணையில் முத்துசீமான் சென்னைக்கு வந்து சுங்க சோதனைகள், குடியுரிமை சோதனை, மற்றும் கொரோனா சோதனைகளை முடித்துவிட்டு சென்றுவிட்டது தெரியவந்துள்ளது.
அதோடு விமான நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, அவர் தனது உடமைகளை எடுத்துக்கொண்டு விமான நிலையத்திலிருந்து வெளியேறும் காட்சி பதிவாகியுள்ளது.எனவே விமான நிலைய அதிகாரிகள் சென்னை புறநகர் காவல்துறையினரிடம் இந்த வழக்கினை மாற்றியுள்ளனர். அதன்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன முத்து சீமானை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.