தேர்தலின் விதிமுறைகளை கடைபிடிக்காத மதுபான கடை ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் முடியும் வரை அமலில் இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அரசு மதுபான கடைகள் மற்றும் தனியார் மதுபான கடைகளில் மது விற்பனை செய்ய விதி முறைகள் இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். அதன்பின் தேர்தல் நடத்தை விதிகள் முடியும் வரை மதுபான கடைகளில் இருக்கும் இருப்புகளை காட்டிலும் 50 சதவீதம் மிகாமல் மதுபானங்கள் இருக்கும் படி பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென கலெக்டர் கூறியுள்ளார்.
அதன்பிறகு கடைகளில் விற்பனையாகும் ஒவ்வொரு மதுபான பாட்டில்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கண்டிப்பாக ரசீது வழங்க வேண்டும் என கூறியுள்ளார். பின்னர் மதுபானங்களை மொத்தமாக விற்பனை செய்யக்கூடாது எனவும், நாள்தோறும் விற்பனையாகும் மதுபானங்களின் பதிவேடுகளை பதிவு செய்ய வேண்டுமெனவும், மதுக்கடைகள் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனை மீறி செயல்பட்டால் விற்பனையாளர்கள் மற்றும் கடை மேற்பார்வையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும் அரசியல் பிரமுகர்கள் அளிக்கும் கூப்பன் மூலமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதை கண்டறிந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.