பறிமுதல் செய்யப்பட்ட ரூ.13 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை காவல்துறையினர் ரோடுரோலர் உதவி கொண்டு உடைத்து அழித்தனர்.
திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கடத்தி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி மாநகர மது விலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையிலான காவல்துறையினர் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். கடந்த ஒரு வருடத்தில் மது கடத்தல் தொடர்பான வழக்கில் பலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 7 ஆயிரத்து 685 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை அழிப்பதற்கு கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை அழிப்பதற்காக அவற்றை லாரியில் ஏற்றி நெல்லை ரெட்டியார்பட்டி மகிழ்ச்சி நகர் பகுதியில் உள்ள காலி இடத்துக்கு சென்றனர். அங்கு மது பாட்டில்களை வரிசையாக அடுக்கி வைத்து தாசில்தார் முன்னிலையில் மதுபாட்டில்கள் மீது ரோடு ரோலரை இயக்கி உடைத்து அழித்தனர். இதனைத் தொடர்ந்து கோர்ட்டு அனுமதியுடன் மொத்தம் ரூ.53 லட்சம் மதிப்பிலான 7635 மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டதாக மதுவிலக்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.