வாலிபரை அரிவாளால் வெட்டி விட்டு பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி புதுச்சத்திரம் காளியம்மன் கோவில் தெருவில் சிங்கப்பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயகுமார் என்ற மகன் இருக்கின்றார். இதில் விஜயகுமார் தனது உறவுக்கார பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் தஞ்சைக்கு பனவெளி வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது பனவெளி வெண்ணாற்று பாலம் அருகே வந்து கொண்டிருக்கும்போது எதிரே ஸ்கூட்டரில் வந்த 2 வாலிபர்கள் அரிவாளுடன் விஜயகுமாரின் மோட்டார்சைக்கிளை வழிமறித்தனர்.
இதனையடுத்து அந்த வாலிபர்கள் அரிவாளால் விஜயகுமாரை வெட்டிவிட்டு உறவுக்காரப் பெண் கழுத்தில் கிடந்த 1 பவுன் நகை மற்றும் செல்போனை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதனை பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பின் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மூலம் அனைத்து வாகன சோதனை சாவடிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து பள்ளியக்ரஹாரம் ஐடியல் ஹோட்டல் அருகில் உள்ள வாகன சோதனை சாவடியில் தலைமை காவலர் முரளிதரன், நெடுஞ்சாலை ரோந்து பணி தலைமை காவலர் நெடுஞ்செழியன், டிரைவர் ராஜ்குமார் போன்றோர் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது நகையை பறித்துச் தப்பிச் சென்ற 2 பேர் ஸ்கூட்டரில் வருவதை காவல்துறையினர் பார்த்தனர். அதன்பின் அவர்கள் 2 பேரையும் காவல்துறையினர் விரட்டி பிடித்து நடுக்காவேரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் கும்பகோணம் மொட்டகோபுரம் பகுதியை சேர்ந்த தினேஷ் மற்றும் தாராசுரம் கடை வீதியை சேர்ந்த பிரகாஷ் என்பது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து விஜயகுமார் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிந்து தினேஷ், பிரகாஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த அரிவாள், 1 பவுன் நகை மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.