கிராம நிர்வாக அலுவலரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்திப்பட்டி கிராமத்தில் விவசாயியான அன்பழகன் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளார். அப்போது அங்கு வேலை பார்த்த கிராம நிர்வாக அலுவலரான தங்கவேல் என்பவர் 4000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான் பட்டாவில் பெயர் மாற்றம் செய்து தரப்படும் என கூறியுள்ளார்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் அன்பழகன் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினரின் அறிவுரைப்படி ரசாயம் தடவிய 4000 ரூபாய் நோட்டுகளை அன்பழகன் தங்கவேலிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த காவல்துறையினர் தங்கவேலுவை கையும் களவுமாக பிடித்து விட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.