ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள முத்துபட்டியில் முத்துகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராணி என்ற அமுதராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முத்துகுமார் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு அடிக்கடி சிறை சென்று வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து கடந்த 2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த முத்துகுமார் அமுதராணியை கத்தியால் குத்தி மனைவியை கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து அமுதராணியின் தந்தை கமுதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் முத்துக்குமாரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கு ராமநாதபுரம் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று கொலை வழக்கின் இறுதி விசாரணை நடைபெற்றுள்ளது. அப்போது குற்றவாளியான முத்துகுமாருக்கு ஆயுள் தண்டனையும், 3,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சுபத்ரா தீர்பளித்துள்ளார்.