குட்டை தண்ணீரில் மூழ்கி பாட்டியும், பேத்தியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மங்கிபட்டி பகுதியில் பச்சை கண்ணு-ராணி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ராதிகா என்ற மகள் உள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பாலசுப்பிரமணியம் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 7 வயதுடைய நிதிலாஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் பெய்த கன மழையால் கல்குவாரி குட்டையில் தண்ணீர் நிரம்பி காணப்பட்டுள்ளது. இதனால் ராணி தனது பேத்தியான நிதிலாஸ்ரீயுடன் அங்கு குளிப்பதற்காக சென்றுள்ளார்.
இதனை அடுத்து பாறையின் மேல் அமர்ந்து ராணி துணி துவைத்துக் கொண்டிருந்த போது சிறுமி எதிர்பாராத விதமாக குட்டைக்குள் விழுந்து விட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ராணி தனது பேத்தியை காப்பாற்ற முயற்சி செய்யும் போது இரண்டு பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர். இதனையடுத்து குளித்து கொண்டிருந்த 2 பேரும் காணாமல் போனதை பார்த்து அருகில் இருந்தவர்கள் குட்டைக்குள் இறங்கி சிறுமியை மீட்டனர்.
அதன்பிறகு சிறுமியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நிதிலாஸ்ரீ ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராணியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.