தொழிலாளியின் கவனத்தை திசை திருப்பி மர்ம நபர்கள் நூதன முறையில் 1 லட்ச ரூபாய் பணத்தை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோவிலூர் பகுதியில் கூலித் தொழிலாளியான ரகுபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்டேட் வங்கியில் இருந்து 1 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து வந்து அதனை ஒரு பையில் வைத்துள்ளார். இந்நிலையில் பணம் இருந்த அந்த பையினை சைக்கிளில் மாட்டிக்கொண்டு ரகுபதி தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ரகுபதியின் கவனத்தை திசை திருப்புவதற்காக பத்து ரூபாய் நோட்டுகளை சைக்கிளின் பின்புறம் சிதற விட்டுள்ளனர். அதன்பிறகு ரகுபதியிடம் உங்கள் பணம் கீழே கிடக்கிறது என அந்த மர்ம நபர்கள் கூறியுள்ளனர்.
இதனால் ரகுபதி தனது சைக்கிளை நிறுத்தி விட்டு கீழே கிடந்த 10 ரூபாய் நோட்டுகளை எடுத்து கொண்டிருந்த போது மர்ம நபர்கள் பணப்பையை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ரகுபதி அந்த மர்ம நபர்களை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளார். ஆனாலும் அவர்கள் கிடைக்காததால் ரகுபதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.