Categories
மாநில செய்திகள்

உலகமே மெச்சும் கீழடி நீர் மேலாண்மை – தமிழ்நாடு தொல்லியல் துறை …!!

கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட சுடுமண் குழாய்களும், வடிகட்டி போன்ற அமைப்பும் நீர் மேலாண்மையில் கிமு 6ஆம் நூற்றாண்டிலேயே கீழடி மக்கள் சிறந்து விளங்கியிருப்பதை காட்டுவதாக, தமிழ்நாடு தொல்லியல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மதுரைக்கு அருகே கீழடியில் மத்திய, மாநில தொல்லியல் துறையின் சார்பாக ஐந்து கட்ட அகழாய்வுகள் நடைபெற்றன. இந்த ஆய்வில் பல்வேறு வியக்கத்தக்க தொல்லியல் அடையாளங்கள் கிடைத்துள்ள நிலையில், இரண்டாம் அகழாய்வில் கண்டறியப்பட்ட செங்கல் கட்டுமானம், நீர் வடிகால் அமைப்பு, தொட்டி போன்ற அமைப்பின் தொடர்ச்சி ஐந்தாம் கட்ட அகழாய்விலும் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு தொல்லியல் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “குறிப்பிட்ட அகழாய்வுக்குழியில் 47 செ.மீ ஆழத்தில் பானையின் வாய்விளிம்பு போன்ற அமைப்பு தென்பட்டது. அப்பகுதியில் தொடந்து அகழாய்வுப் பணி செய்தபோது சிவப்பு வண்ணத்தில் செம்மையாக வடிவமைக்கப்பட்டுள்ள 60 செ.மீ. நீளமும், 20 செ.மீ விட்டம் கொண்ட வாய்ப்பகுதி உள்ள இரண்டு சுடுமண் குழாய்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து காணப்பட்டன. ஒவ்வொன்றின் மேல் பாகத்தில் ஐந்து விளிம்புகள் கொண்ட இச்சுடுமண் குழாய்கள் இணைந்து சுருள் வடிவு குழாய் போன்று காணப்படுகின்றது. மேலும் இக்குழாய் ஒன்றின் வாய்பகுதியில் இடப்பட்டிருந்த மூன்று துளைகள் வடிகால் குழாய் அமைப்பாக பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

report of the archaeological survey, Water Management of keezhadi peoples

இச்சுடுமண் குழாய் அருகில் தொடர்ந்து அகழாய்வுப் பணி செய்தபோது 52 செ.மீ. ஆழத்தில் சில கூரை ஓடுகள் செங்குத்தாக அடுக்கப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டன. மேலும் பணிகளைத் தொடர்ந்தபோது செங்கல் கட்டுமானம் ஒன்று வெளிப்பட்டது. அகழாய்வுப் பணியின் இறுதி கட்டத்தில் சுருள் வடிவிலான சுடுமண் குழாயின் கீழே பீப்பாய் வடிவிலான மூன்று சுடுமண் குழாய்கள் ஒன்றுடன் ஒன்று பொருத்திய நிலையில் கண்டறியப்பட்டன. வடிவம் மட்டுமின்றி அளவுகளிலும் வேறுபட்ட சுருள் மற்றும் பீப்பாய் வடிவிலான இரண்டு குழாய்களும் மேலும் கீழுமாக அடுக்கிவைக்கப்பட்டுள்ளன.

report of the archaeological survey, Water Management of keezhadi peoples

கீழடுக்கில் பீப்பாய் வடிவிலான குழாயின் நுழைவுப் பகுதியில் வடிகட்டி ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வடிகட்டியின் நான்கில் மூன்று பாகங்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த பீப்பாய் வடிவ குழாயில் செல்லும் திரவப்பொருள் அல்லது நீரை வடிகட்டும் வடிகட்டியாக செயல்பட்டுள்ளது எனக்கொள்ளலாம். அதேபோன்று, இக்குழாயின் இறுதிப்பகுதியானது இரண்டடுக்கு பானையின் வாய்ப்பகுதியில் சேர்கிறது. எனவே, இந்த பீப்பாய் வடிவிலான குழாயின் வழியாக இரண்டு அடுக்கு கொண்ட பானையில் திரவம் அல்லது நீர் சேமித்து இருக்க வேண்டும்.

Image result for keeladi

இந்த அகழாய்வுக் குழியின் இரண்டாம் கால்பகுதியில் திறந்த நிலையில் நீர் செல்லும் வகையிலான 50 செ.மீ. ஆழத்தில் திறந்தவெளியில் நீர் செல்லும் வடிகால் வெளிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து அகழாய்வு மேற்கொண்டதில் இச்செங்கல் கட்டுமானம் 11 அடுக்குகளுடன் 5.8 மீ. நீளமும் 1.6 மீ. அகலமும் கொண்டுள்ளது. இந்த செங்கல் தளத்தின் மீது கூரை ஓடுகள் பாவப்பட்டுள்ளன. இது தண்ணீர் எளிதாக வெளியில் செல்லும் வகையில் அமைக்கப்பட்ட திறந்தநிலையிலான வடிகால் அமைப்பாக காணப்படுகிறது.

Image result for keeladi

இந்த வடிகால் அமைப்பின் சிறப்பு என்னவெனில் இந்திய தொல்லியல் துறை இரண்டாம் கட்டத்தில் செங்கல் கட்டுமானம் நீர் வடிகால் அமைப்பு, தொட்டி ஆகியவை வெளிப்படுத்தப்பட்ட பகுதியின் தென்பகுதியில் தற்போது அக்கட்டுமானத்தின் தொடர்ச்சி கண்டறியப்பட்டது என்பதே ஆகும். இரண்டாம் கட்டத்தில் வெளிப்படுத்தப்பட்ட செங்கல் கட்டுமானத்துடன் கூடிய திறந்தவெளி வடிகாலின் தொடர்ச்சி தற்போது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அடுத்தக் கட்ட அகழாய்வில் இதன் நீட்சி தெரியவரும்.

Image result for keeladi

தமிழ்நாட்டில் பல்வேறு அகழாய்வுகளில் வெளிக்கொணரப்பட்டுள்ள வடிகால் அமைப்புக் குழாய்களிலேயே வேறுபட்ட நிலையில் மேற்சொன்ன மூன்று வடிகால் அமைப்புகளும் கண்டறியப்பட்டுள்ளது கீழடி அகழாய்வின் சிறப்பாகும். இதன் மூலம் சங்ககால மக்கள் நீர் மேலாண்மையில் எத்தகைய தொழில்நுட்பங்களை பயன்படுத்தியுள்ளனர் என்பதை நம் கண் முன்னே காண்கிறோம்.” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

Categories

Tech |