தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் அன்று தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறக்கூடிய வகையில் வேட்டி மற்றும் சேலை, பச்சரிசி, சர்க்கரை, திராட்சை, ஏலக்காய் மற்றும் முந்திரி ஆகியன பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த வருட பொங்கல் பண்டிகையின் போது குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்பட்டது.இதையடுத்து ஜூன் மாதமே வேட்டி மற்றும் சேலை தயாரிப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டு விசைத்தறியாளர்களுக்கு நூல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி நடப்பு ஆண்டு பொங்கலுக்கு விலையில்லா வேட்டி சேலை தயாரிப்பதற்காக தமிழக அரசு ரூ.499 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் நூல்கள் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்படாத நிலையில், வேட்டி மற்றும் சேலை உற்பத்தி செய்யும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இதற்குமேல் நூல்களுக்கான டெண்டர் அனுப்பப்பட்டு அதன்பிறகு நூல்களுக்கு சாயம் போட்டு சேலை மற்றும் வேட்டி தயாரித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் வழங்குவது சாத்தியமில்லை என்று நெசவாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் காரணத்தினால் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக வேட்டி மற்றும் சேலை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.