பெற்றோரிடம் இருந்து சாணிப்பவுடர் கலந்த நீரை மகன் வாங்கி குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வடக்குப்பேட்டை காமாட்சி அம்மன் கோவில் சந்து பகுதியில் காளப்பன்-லட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் நிகழ்ச்சிகளுக்கு சமையல் வேலை செய்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு அருண்குமார் என்ற மகன் இருந்தார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இதனையடுத்து அருண்குமார் கொரோனா தொற்று காரணமாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் அருண்குமார் தனது நண்பர்களுடன் குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்ததுடன், போதையில் பல பேருடன் சண்டையில் ஈடுபட்டுள்ளார்.
இதன் காரணமாக உறவினர்கள் இடையில் காளப்பனுக்கு அவமானம் ஏற்ப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் மகனை மிரட்டுவதற்காக காளப்பன் மற்றும் அவரது மனைவி லட்சுமி இருவரும் ஒரு டம்ளரில் சாணிப்பவுடர் கலந்த நீரை கலக்கி வைத்திருந்தனர். அதன்பின் கணவன்-மனைவி இருவரும் அருண்குமாரிடம் “உன் குடிப்பழக்கத்தால் நாங்கள் அவமானபட்டது போதும் என்று சாணிப்பவுடர் கலந்த நீரை குடித்து தற்கொலை செய்வதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அருண்குமார் தன்னால் தானே உங்களுக்கு அவமானம் ஏற்பட்டது என்று அவர்கள் கையில் இருந்த சாணிப்பவுடர் கலந்த நீரை திடீரென வாங்கி குடித்து விட்டார். இதனைதொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அருண்குமாரை மீட்டுஅரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருண்குமார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.