ஜெர்மனியில் பொதுத்தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே தேர்தல் முடிவு ஒளிபரப்பான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனியில் செப்டம்பர் 26 ஆம் தேதி பொதுத்தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில் செப்டம்பர் 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை ARD சேனலில் வினாடி வினா நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் போது திடீரென திரையின் கீழ் பகுதியில் பொது தேர்தல் முடிவுகளை காட்டும் பேனர் தோன்றியது. இது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேனரில் ஜெர்மன் பொதுத்தேர்தலில் யூனியன் கட்சி 22.1 சதவீதமும், சமூக ஜனநாயக கட்சி 22.7 சதவீதமும், தி ஆல்டர்னாடிவ் போர் ஜெர்மனி 10.5 சதவீதமும், சுதந்திர ஜனநாயக கட்சி 13.2 சதவீதமும் வாக்குகளை பெறும் என காண்பித்தது. லெஃப்ட் மட்டும் கிரீன் கட்சிகளுக்கான முடிவை காண்பிக்கும் முன் ஏஆர்டி சேனல் பேனரை எடுத்துவிட்டது.
இதுகுறித்து விளக்கம் அளித்த ஏஆர்டி சேனலின் தலைவர் ஹோலகேர் லிகிட்டேந்தாலேர் கூறியதாவது “இது தேர்தல் முடிவுகளை வெளியிடுவதற்கான தொழில்நுட்ப முன்னோட்ட சோதனை ஆகும். இந்த சோதனை நேரலையில் இல்லாமல் தனியாக நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தவறுதலாக நேரலையில் ஒளிபரப்பு ஆகிவிட்டது. இது தெரியாமல் நடந்த ஒரு சம்பவமாகும். இதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.