வனசரக அதிகாரியை கைது செய்ததற்காக வனத்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வனச்சரகம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள விடுதியில் சிலர் தங்கியிருந்தனர். இந்நிலையில் இரவு நேரங்களில் அங்கு தங்கியிருந்தவர்கள் வெளியே நின்று கொண்டிருந்ததால் வனசரக அதிகாரியான ஜெயச்சந்திரன் அவர்களை உள்ளே செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் வனச்சரக அதிகாரிக்கும் அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் வனச்சரகர் மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வால்பாறை நீதிமன்றம் தலைமை எழுத்தர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜெயசந்திரனை கைது செய்துள்ளனர்.இதனை கண்டித்து ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி திருப்பூர் வனக்கோட்டத்தில் வேலை செய்யும் வனச்சரகர், வேட்டை தடுப்பு காவலர்கள், வனகாப்பாளர் உள்ளிட்ட 300 பேர் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை குறித்து மாநில தலைவரான சிவப்பிரகாசம் கூறியதாவது, வனச்சரக அதிகாரி ஜெயச்சந்திரன் மீது பொய்யான வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் அவரை கைது செய்ததை கண்டிக்கிறோம். இதனையடுத்து பணியில் இல்லாத இரவு நேரத்தில் மது அருந்துவது என்பது அவரது தனிப்பட்ட விஷயமாகும் என்றும், வனத்துறை உள்ளிட்ட துறை சார்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் போது இருதரப்பு உயர் அதிகாரிகளும் நேரடியாக விசாரணை நடத்த வேண்டும் என்ற அரசாணையை காவல்துறையினர் பின்பற்றவில்லை என்றும் கூறியுள்ளார்.
எனவே வழக்கு பதிவை ரத்து செய்து வனச்சரகரை மீண்டும் அதே இடத்தில் பணியில் அமர்த்த வேண்டும் என கூறியுள்ளார். தலைமை எழுத்தரை பணி நீக்கம் செய்வதற்கான கோரிக்கைகள் அடங்கிய மனுவை டிஜிபி தலைமை நீதிபதி முதலமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் மீதான வழக்கை ரத்து செய்யாவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.