3-வது கட்ட சிறப்பு முகாமில் 45,000 நபர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்திருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தடுப்பூசி போடுவதற்கான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கியுள்ளார். அப்போது இம்மாவட்டத்தில் மூன்றாவது கட்டமாக கொரோனா தடுப்பூசி போடும் முகாம் காலை 7 மணி முதல் மற்றும் இரவு 7 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த முகாம்கள் சிறப்பாக நடைபெற அனைத்து துறை அலுவலர்களும் பணியாற்றிட வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார். அதன்பின் 546 இடங்களில் முகாம்கள் நடத்தி முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இந்த முகாமில் அதிகமான பொதுமக்கள் அழைத்து வருவதற்கு அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், மகளிர் குழுவினர், உதவியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இம்மாவட்டத்தில் 10, 32, 346 நபர்கள் வசித்து வருகின்றனர். இதில் தற்போது முதல் டோஸ் 4, 60, 276 நபர்களுக்கும், இரண்டாவது ரோஸ் 96, 823 நபர்களுக்கும் போடப்பட்டிருக்கிறது. இவற்றில் மொத்தமாக 46% நபர்களுக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.
பின்னர் வரும் வாரங்களில் இதை அதிகரித்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் 3-வது கட்ட சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 40 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கும் வரையில் பொதுமக்களை அழைத்து வர வேண்டும். மேலும் உடல் பிரச்சினை குறித்து சந்தேகம் உள்ள பொதுமக்கள் தங்கள் உடலை பரிசோதனை செய்த பிறகு தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.