ஆப்கானிஸ்தானில் தலீபான் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அரசாங்க ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட்டுகள் குறித்த குழப்பத்திற்கு தீர்வாக அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
தலீபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியபின் அந்நாட்டின் பெயரை இஸ்லாமிய அமீரக ஆப்கானிஸ்தான் எனவும், அரசாங்க கொடியாக தலீபான் கொடியையும் மாற்றினர். இந்நிலையில், ஆப்கானியர்களிடையே முந்தைய அரசாங்கம் வழங்கிய அடையாள அட்டைகள் மற்றும் பாஸ்போர்ட்டுகள் தற்பொழுது செல்லுபடி ஆகுமா? என்ற கலக்கம் நிலவி வருகிறது.
இதனைத் தொடர்ந்து இக்கலகத்திற்கு தீர்வாக தலீபான் அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய அமீரக செய்தித் தொடர்பாளரும், துணை அமைச்சருமான Zabihullah Mujahid வெளியிட்டதாக தலீபான் அரசு நடத்தும் Bakhtar News Agency வெளியிட்ட அறிவிப்பில் முந்தைய அரசால் வழங்கப்பட்ட அனைத்து ஆவணங்களும், பாஸ்போர்ட்டுகளும் செல்லுபடியாகும். ஆனால் ‘இஸ்லாமிய எமிரேட்’ என்ற பெயரில் தான் இனிமேல் அடையாள அட்டைகள் மற்றும் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படும் என Zabihullah Mujahid தெரிவித்துள்ளதாக Bakhtar News Agency கூறியுள்ளது.