கோவில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நரிகுப்பம் பகுதியில் படவேட்டம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் காலையில் வழக்கம் போல் கோவிலை திறப்பதற்காக வந்த அர்ச்சகர் கோவில் உண்டியல் மற்றும் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் இது தொடர்பாக கிராமத்தில் உள்ளவர்களிடம் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கிராம மக்கள் கோவிலை வந்து பார்த்த போது உண்டியல் உடைத்து அதில் இருந்த பணத்தையும், பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகைகளையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது அவர்களுக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கோவிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை உடைத்து அதிலிருந்த ஹார்டு டிஸ்கையும் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கோவில் அர்ச்சகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோவிலில் திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.