Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“உங்களுக்கு மாங்கல்ய தோஷம் இருக்கு” பெண்ணை ஏமாற்றிய போலி மந்திரவாதி…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மாங்கல்ய தோஷம் இருப்பதாக கூறி பெண்ணை ஏமாற்றிய போலி மந்திரவாதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் கஸ்தூரி ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுஜிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சுஜிதாவிற்கு நாகர்கோவில் பகுதியில் வசிக்கும் 49 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அந்த பெண்ணிடம் சுஜிதா தன்னை ஒரு சாமியார் போல காட்டிக் கொண்டார். இதனையடுத்து சுஜிதா அந்த பெண்ணுக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதாக கூறியுள்ளார். அதன்பின் அவருடைய 2 மகள்களுக்கு திருமணமே ஆகாது என்றும் கூறியுள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தோஷத்தை போக்க என்ன செய்ய வேண்டும் எனவும், தோஷம் நீங்க பரிகாரமாக நான் எதை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கிறேன் எனவும் சுஜிதாவிடம் கூறியுள்ளார். இதனை சுதா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சம்பந்தப்பட்ட பெண்ணிடம் பரிகார பூஜை நடத்த வேண்டும் என்று கூறி அவரிடம் இருந்த நகையை கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பெண் மாங்கல்ய தோஷம் என்று கூறியதால் தனது கணவருக்கு ஆபத்து வரக்கூடாது என்று நினைத்து முதலில் தன்னிடம் இருந்த கொஞ்ச நகையை சுஜிதாவிடம் கொடுத்துள்ளார்.

அதன்பின் பூஜை, வேண்டுதல் எனக் கூறி சம்பந்தப்பட்ட பெண்ணிடம் சுஜிதா கடந்த 8 மாதங்களாக கொஞ்சம் கொஞ்சமாக நகைகளை அபகரித்திருக்கிறார். அதிலும் கடைசியாக 8 பவுன் நகையை கொடுத்துவிட்டு அந்த பெண்ணிடமிருந்து ஒரிஜினல் நகையை சுஜிதா வாங்கியுள்ளார். மேலும் சுஜிதா அந்த பெண்ணிடம் இந்த விவகாரம் யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்ளும்படி கூறியிருக்கிறார். தற்போது சம்பந்தப்பட்ட பெண்ணிடம் சுஜிதா மொத்தம் 22 1\4 பவுன் நகையை அபகரித்துள்ளார். இந்நிலையில் சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் அவரிடம் நகையை கேட்டுள்ளார்.

அப்போது சுஜிதா நகையை அபகரித்த விவரம் குறித்து அந்த பெண்ணின் கணவருக்கு தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வடசேரி காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் சுஜிதா போலி மந்திரவாதி என்பதும் அவர் மாங்கல்ய தோஷம் இருப்பதாக பெண்ணை ஏமாற்றி 22 1\4 பவுன் நகையை அபகரித்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சுஜிதாவை கைது செய்ததோடு அவரிடமிருந்து 22 1\4 பவுன் நகையை மீட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |