திருமணமான 10 மாதத்தில் மின்சார வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூவத்தூர் கருப்பன் தெருவில் பாஸ்கர் மகன் ராஜா வசித்துவந்தார். இவருக்கு பாண்டிச்செல்வி என்ற மனைவி இருக்கிறார். இவர் 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதில் ராஜா உறந்தைராயன்குடிக்காடு பிரிவு தமிழ்நாடு மின்சார அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பூவத்தூர் பகுதியில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை ராஜா சரி செய்ய முயற்சி செய்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக ராஜா மீது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.