ஆசிரியர் வீட்டில் திருடிய சிறுவனை மடக்கி பிடித்து பொதுமக்கள் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கே.கே.நகர் பகுதியில் விஜயராஜா என்பவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் கொள்ளனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு காற்றுவரவில்லை என கதவை திறந்து வைத்துவிட்டு படுத்து துங்கியுள்ளார். இதனையடுத்து நள்ளிரவில் யாரோ வீட்டில் இருந்த பீரோவை திறக்கும் சத்தம் கேட்டு விஜயராஜாவின் மனைவி எழுந்துள்ளார். அப்போது சிறுவன் ஒருவன் பீரோவில் இருந்து பணத்தை எடுப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டுள்ளார்.
இந்நிலையில் அந்த சிறுவன் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார். இதனைதொடர்ந்து மனைவியின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த விஜயராஜா உடனடியாக தப்பிக்க முயன்ற சிறுவனை மடக்கி பிடித்துள்ளார். மேலும் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சிறுவனை அடித்து விசாரித்துள்ளனர். இந்நிலையில் சிறுவன் விஜயராஜா வீட்டில் இருந்து 4 பவுன் நகை மற்றும் 2,000 ரூபாய் திருடியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற ராமநாதபுரம் பஜார் காவல்துறையினர் காயமடைந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமத்தித்துள்ளனர். இதனையடுத்து நகைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் சிறுவனை கைது செய்து செய்துள்ளனர்.