மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் குடும்பத்தினரை கொலை செய்வதாக மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நிலாவூர் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக கூறி அவரது குடும்பத்தினரிடம் கடந்த மாதம் பத்து லட்சம் ரூபாய் கொடுக்கும் படி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு குடும்பத்தினர் பணம் கொடுக்க முடியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சீனிவாசன் தனது மனைவி நாசி மற்றும் மகனை வீட்டை விட்டு விரட்டி உள்ளார். இதனைத் தட்டிக் கேட்க சென்ற குடும்பத்தினரை கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். பின் அவரால் விரட்டப்பட்ட குடும்பத்தினர் உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளனர்.
இந்நிலையில் சீனிவாசன் வீட்டில் வைத்திருந்த கேழ்வரகு, அரிசி, நெல், பருப்பு மூட்டைகளை நாசம் செய்து ஜன்னல்கள் மற்றும் வீட்டின் கதவு அனைத்தையும் உடைத்து மர்ம நபர்கள் சூறையாடினர். இது பற்றி சிலர் சீனிவாசனின் மனைவி நாசிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்து வீட்டிற்கு சென்ற குடும்பத்தினரை சீனிவாசன் கத்தி எடுத்து விரட்டியதாக தெரியவந்துள்ளது. இதனால் பயந்த குடும்பத்தினர் தலைமறைவாகி உள்ளனர். இதனையடுத்து எந்த வித அசம்பாவிதமும் ஏற்படக் கூடாது என ஊர் மக்கள் ஒன்று திரண்டு சீனிவாசனை விரட்டி பிடித்து கம்பத்தில் கட்டி வைத்துள்ளனர்.
பின்னர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் சீனிவாசனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் கடந்த மூன்று மாதங்களாக சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் உதவியுடன் அப்பகுதி மக்கள் சீனிவாசனை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.