கர்நாடகாவில் தெருநாய்கள் கடித்ததால் இறந்த குரங்கிற்கு கிராம மக்கள் இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்த சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் ஜோவரகி தாலுக்காவில் அரலாகுண்டாகி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சில மாதங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய குரங்கு ஒன்று தஞ்சமடைந்தது. இந்த குரங்கு அந்த கிராமத்தில் உள்ள வீடுகள் கடைகளில் புகுந்து உணவு பொருட்கள் மற்றும் தின்பண்டங்களை தின்று வந்துள்ளது. இதனால் காலப்போக்கில் அங்குள்ள கிராமவாசிகள் அந்த குரங்கிடம் அன்பு காட்டத் தொடங்கினர்.
இந்நிலையில் தெரு நாய்கள் அந்த குரங்கை அடிக்கடி சுற்றி வருவதும் தெருநாய்கள் இடமிருந்து அந்த குரங்கு தப்பித்து விடுவதும் வழக்கமான ஒன்றாக இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று தெரு நாய்கள் குரங்கை துரத்திச் சென்றதில் நிலைதடுமாறிய குரங்கின் மீது தெருநாய்கள் விழுந்து அதனை கடித்துக் குதறி உள்ளது. இதை பார்த்த பொதுமக்கள் தெரு நாய்களை விரட்டி அடித்துள்ளார். ஆனால் தெரு நாய்கள் கடித்ததில் படுகாயமடைந்த குரங்கு சிறிது நேரத்திலேயே உயிரை விட்டது. இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து கண்ணீர் விட்டுள்ளனர். தங்களுடன் பல மாதங்களாக பழகி வந்த குரங்கு திடீரென இறந்ததை ஏற்றுக்கொள்ள முடியாத கிராம மக்கள், அந்த குரங்குக்கு இறுதி சடங்கு நடத்த வேண்டும் என முடிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து இறந்துபோன குரங்கிற்கு கிராமத்தின் மையப்பகுதியில் ஒரு சாமியான பந்தல் போட்டு, இருக்கையில் குரங்கின் உடலை வைத்து அதற்கு பூமாலை அணிவித்து, தலைப்பாகை கட்டி கிராம மக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர். பிறகு விடிய விடிய குரங்கிற்கு பல்வேறு பூஜைகள் மற்றும் சடங்குகள் நடத்தப்பட்டு இரவு முழுவதும் கிராம மக்கள் குரங்கின் உடல் அருகிலேயே அமர்ந்து இருந்தனர். பின்னர் காலை இறுதி அஞ்சலி செலுத்தி குரங்கின் உடலை ஊர்வலமாக எடுத்துச் சென்று அங்குள்ள மயானத்தில் அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் அருகாமையில் இருந்த கிராம மக்களால் பரபரப்பாக பேசப்பட்டது.